ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் முகாமினை மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை மற்றும் வீட்டுவசதி வாரிய துறை அமைச்சர் முத்துச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வருவாய் துறையினருக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துச்சாமி, "ஈரோடு மாவட்டத்தில் நகர பகுதியில் மட்டும் நடைபெறவுள்ள 87 முகாம்களில் 38 முகாம்கள் நிறைவடைந்துள்ளது. இதில் மகளிர் உரிமை தொகை தொடர்பான விண்ணப்பம் மீது தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளுக்கு அனுமதி பெறுவதற்கான கால அவகாசம் பிப்ரவரி மாதம் 20ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் கால அவகாசம் வழங்க நீதிமன்றம் அனுமதிக்காது. மேலும் நீதிமன்றம் இதற்கு முறையாக வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது. அதில் 2007 ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்திற்கும், 2011ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிகட்டிங்களுக்கும், 2016ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டுமனைகளுக்கும் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
இதனால் அரசு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அனுமதி பெறுவதில் விதிமுறைகள் ஏதும் கடுமையாக இல்லை. வீட்டுமனையாளர்களிடம் இருந்து மனைவாங்கியவர்களுக்கு அனுமதி பெற தனியாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. வீட்டுமனைகள் போடப்பட்டுள்ள சாலைகளில் அரசிடம் வழங்கவில்லையென்றால் அவை அனுமதி பெறாத வீட்டுமனைகளாக தான் கருதப்படும்.
அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் கீழ் 1037 குளங்களில் இன்னும் 35 குளங்கள் மட்டும் சோதனை செய்ய வேண்டி உள்ளது. அவை அனைத்தும் சோதனை நிறைவடைந்த பின் உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்.தமிழகத்தில் பெருவாரியான மதுக்கடைகளில் வாடகை முறையாக வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சில இடத்தில் சிலர் வாடகை வழங்காமல் இருந்து இருக்கலாம். பெருவாரியான இடத்தில் தவறு நடப்பது இல்லை.
தமிழகத்தில் பேரிடரின் போது உற்பத்தி திறன் பாதிக்கப்படும் இடங்களில் அரசு கவனம் செலுத்துவது என்பது வழக்கமான ஒன்று. அதை முதல்வர் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் பல்வேறு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அனைத்து பாதிப்புகளுக்கும் முறையாக இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது. அதில் சில இடங்களில் எதிர்பாராத விதமாக தவரு நிகழ்ந்துள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!