ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத் தளபதியாக இருந்த பொல்லானுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என அருந்ததியர் அமைப்பினர் அரசை வலியுறுத்தி வந்த நிலையில், பொல்லானுக்கு மணிமண்டபத்துடன் கூடிய அரங்கம் அமைக்க ஒரு கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (அக்.23) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, சாமிநாதன் மற்றும் தமிழ் புலிகள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்று, தங்களது கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “தீரன் சின்னமலையின் படைத் தளபதியாகச் செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு வீர வரலாற்றை உள்ளடக்கிய அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பொல்லானுக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் மணிமண்டபம் கட்ட கடந்த 2021-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அந்த மணிமண்டபத்தை நல்லமங்காபாளையம் பகுதியில் அமைக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், அந்த இடம் போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, 41 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்து ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்ட திட்டமிட்ட நிலையில், முதலமைச்சர் உத்தரவின் பேரில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில், அரங்கத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், 41 சென்ட் நிலத்தை விடக் கூடுதலாக பொதுப்பணித்துறை சார்பில் 75 சென்ட் நிலம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது மணிமண்டபம் அமைய உள்ள ஜெயராமபுரத்தில் கூடுதல் நிலத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. அது முடிவடைந்த பிறகு, அரங்கத்துடன் கூடிய மணிமண்டபம் கட்டும் பணிகள் நடைபெறும்.
இதில், பொல்லான் குதிரையில் சவாரி செய்வது போன்றும் மணிமண்டபத்தில் நூலகம், வரலாற்றுக் கல்வெட்டுகள் அமைக்க வேண்டும் எனவும் அமைப்புகள் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட நல்ல மங்கா பாளையத்தில், நினைவுக் கல் அமைக்க வைக்கப்பட்ட கோரிக்கையையும் அரசு பரிசீலனை செய்யும்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “சுங்கச்சாவடி குறித்து பலமுறை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரிடம், முதலமைச்சர் மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காலாவதியான சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பது தான் மாநில அரசின் எண்ணம். அதற்கு, மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் பெரும்பான்மை சுங்கச்சாவடி மத்திய அரசுக்கு உட்பட்டுத் தான் உள்ளது. இதே போன்று ஈரோடு மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலையில் அமையவுள்ள பாலப்பாளையம் சுங்கச்சாவடி எதிர்ப்பு குறித்து கவனத்திற்கு வந்துள்ளது. இருப்பினும் நிதித்துறை ஒப்புதல் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்தார்.
கூட்டம் தொடங்கும் முன்பு தீடிரென கூட்டம் காளிங்கராயன் பயணியர் மாளிகைக்கு மாற்றப்பட்டது. அப்போது, அங்கு தமிழ் புலிகள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்பினர் சென்றபோது, கூட்டம் கழிவறைக்கு அருகே ஏற்பாடு செய்யப்பட்டதால் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர், வருவாய்த் துறை அதிகாரி சமாதானம் செய்து மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த புறக்கணிப்பால் சிறிது நேரம் பயணியர் மாளிகையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: திடீரென கூடும் 'திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்'.. பின்னணி என்ன?