ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கர்நாடக மாநிலத்திற்கு சென்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு அரியலூரிலிருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி பர்கூர் மலைப்பாதை முதல் வளைவில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென லாரி பழுதானது. இதைத்தொடர்ந்து, லாரியைச் சரிசெய்து மீண்டும் இயக்க முயன்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, குறுக்கே இருந்த பாறையில் மோதி சாலையில் நடவில் நின்றது.
இதனால், பர்கூர் மலைப்பாதை வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீட்பு வாகனம் மூலம் லாரியை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.