சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிக்கனப்பா. இவரது விவசாய தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இவர் தனது தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சிக்கனப்பா வழக்கம்போல் ஆடுகளை மேய்த்துவிட்டு தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை தோட்டத்திற்கு சென்ற சிக்கனப்பா ஒரு ஆடு கழுத்தில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்தததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் நேற்றிரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததாகத் தெரிவித்ததால் சிறுத்தை தாக்கி ஆடு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து உடனடியாக அப்பகுதியினர் ஜுரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தை ஆட்டைக் கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கால்நடைகளை அடித்துக்கொல்லும் சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.