ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபாநகர் பகுதியில் உள்ள குன்றி மலையடிவாரத்தில், 42 அடி உயரத்தில் கடந்த 1980-ஆம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது. மேலும், குன்றி, விளாங்கோம்பை, கடம்பூர், மல்லியம்மன் துர்கம் உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீர், 10-க்கும் மேற்பட்ட காட்டாற்று பள்ளங்கள் வழியாக குண்டேரிப்பள்ளம் அணையில் தேக்கி வைக்கப்பட்டு விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
அதேநேரம், இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், வினோபாநகர், இந்திராநகர், மோதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில், இந்த அணையில் நேற்று நீர்மட்டம் 32 அடியாக இருந்தது. ஆனால், நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது. இதில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் 10 செமீ (102 மிமீ) மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அணைப் பகுதியில் பெய்த மழை காரணமாக 32 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 34.04 அடியாக உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 25 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது.. ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் சேதம்.. தொடரும் அவலம்!