ஈரோடு மாவட்டம் கவுந்பாடியில் செயல்பட்டுவரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். கடந்த ஆறாம் தேதியன்று 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த உடற்கல்வி ஆசிரியை சரோஜினி மாணவர்கள் கைகளில் கட்டியிருந்த ராக்கி கயிறுகளை அவிழ்த்துவிட்டு விளையாட சொல்லியதாகத் தெரிகிறது
இந்த தகவலை மாணவர்கள் மூலமாக அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் இன்று காலை அப்பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை காவல் துறையினர் தடுத்தி நிறுத்தியபோது "இந்துக்கள் புனிதமாக மதிக்கும் ராக்கி கயிறு, சாமி கயிறுகளை அணிந்து பள்ளிக்கு வரலாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பிரதமர் முதல் சாமானியர்கள்வரை அணியும் ராக்கிக் கயிற்றை சரோஜினி என்ற ஆசிரியை அவிழ்க்கச் சொல்லியது தவறு" என்று வாதம் செய்தனர்.
பின்பு போராட்டத்தில் அவர்களை கவுந்தப்பாடி காவல் துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர். இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், ’விளையாடும்போது கயிறு இடைஞ்சலாக இருக்கும் என கருதி கயிற்றை அவிழ்த்துவிட்டு விளையாடி முடித்தபிறகு மீண்டும் கட்டிக்கொள்ளுமாறு ஆசிரியர் அறிவுறுத்தினார்’ என்றார்.