ஈரோடு: எம்.ஜி.ஆரை அனைவரும் உரிமை கொண்டாடுவார்கள். கேள்வி கேட்காதீர்கள், பதில் சொன்னால் தாங்கமாட்டீர்கள் என கமல்ஹாசன் பேசினார்.
கோபிசெட்டிபாளையத்தில் பரப்புரை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், எனக்கும் கோபிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. என்னுடன் பணியாற்றிய இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் பலரும் கோபியை சேர்ந்தவர்கள். சரித்திரம் சொல்லும் வகையில் வாழ்ந்த மனிதர்கள் இந்த கோபியில் பிறந்துள்ளனர். மனித மலத்தை மனிதன் அள்ளுவதை எதிர்த்த லட்சுமணர் அய்யர் இந்த ஊரைச் சேர்ந்தவர்.
எம்.ஜி.ஆரை அதிகம் நேசித்த ஊர். எம்.ஜி.ஆரை பற்றி நான் பேசிய பிறகு யோசிக்க ஆரம்பித்துள்ளனர். எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாட நீ யார் என்று கேட்கிறார்கள். நான் சொல்லுகிறேன், இங்கே உள்ள ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாடுவார்கள். கேள்வி கேட்காதீர்கள். பதில் கூறினால் தாங்க மாட்டீர்கள். உங்களுக்கும் வேலை இருக்கிறது. எங்களுக்கும் வெற்றி பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கல்விக்காக ரூ. 34 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. எந்த அரசு பள்ளியாவது அப்படி தெரிகிறதா? மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தை தலைநிமிர வைக்க வேண்டும். ஆரோக்கியமாக, அறிவுடன், உணர்வுடன் இருங்கள். சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள். சாதிப்பவன் யார் என்று பார்த்து ஓட்டுப் போடுங்கள். நாளை நமதாகும்.
நீண்ட நாள் நீங்கள் காத்திருக்க வேண்டியது இல்லை. விரைவில் நாளை நமதாகும். உங்களை வைத்து வாழ்க்கையை நடத்துபவர்கள், அவர்கள் குடும்பங்களை எல்லாம் பார்த்துக்கொண்டார்கள். இன்னும் 7 தலைமுறைக்கு ஏற்பாடு செய்து கொண்டார்கள். நீங்கள் உங்கள் குடும்பங்களை பார்த்துக் கொள்ளுங்கள். யோசிக்க வேண்டிய நேரம் இது. யோசித்தே ஆக வேண்டும்.
கோபிசெட்டிபாளையத்தில் ஒரு இரவு சிறிய கூட்டம் இந்த முடிவை எடுத்தது அதனால் தமிழகம் தலை நிமிர்ந்தது என்று நாளை சரித்திரம் கூற வேண்டும். இங்குள்ள அனைவருக்கும் சரித்திரத்தில் இடம் கிடைக்க வேண்டும். ஓட்டு உங்கள் உரிமை. அதை சரியாக பயன்படுத்துங்கள் என்று தெரிவித்தார்.