ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் அருகே உள்ள காமாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் அதேபகுதியில் தேநீர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது தந்தை இறந்துவிட்ட தகவல் அறிந்து நேற்று மாலை வீட்டை பூட்டிவிட்டு செல்வி தனது குடும்பத்தினருடன் தந்தை இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ளார்.
இன்று காலை வீடு திரும்பியபோது செல்வி வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 சவரன் தங்க நகைகள், 56 ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு பணம் மதுபானங்கள் திருட்டு!