ஈரோடு முத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தன்னார்வ விளையாட்டுக் குழுவினர் சார்பில் சுதந்திரத் தினத்தன்று அப்பகுதியில் ஆண்டுதோறும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, கலைநிகழ்ச்சிகளை நடத்தி, இனிப்புக்களை வழங்கி சுதந்திர தின விழாவை கொண்டாடுவது வழக்கம்.
ஆனால், இந்தாண்டு கரோனா தொற்றுப்பரவல் காரணமாக சுதந்திர தின விழாவினை கூட்டத்துடனும், குழந்தைகள், முதியோர்களுடன் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முத்தம்பாளையம் விளையாட்டுக் குழுவினர் இந்தாண்டு வித்தியாசமான முறையில் சுதந்திர தின விழாவைக் கொண்டாட முடிவு செய்தனர்.
அதன்படி, முத்தம்பாளையம் பகுதியிலுள்ள காலி நிலத்தில், அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவியர், பெண்கள் ஒன்றிணைந்து, 40 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட தேசியக் கொடியை தத்ரூபமாக வரைந்தனர். மேலும், அதனுடன் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்களையும் எழுதியிருந்தனர்.
நாட்டின் 74ஆவது சுதந்திர தின விழாவின் போது தேசியக் கொடியின் மீது கொடியின் வடிவில், வரிசையாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நின்றபடி கரோனா வைரஸை வென்றிட முகக் கவசத்தை அணிய வேண்டும், தகுந்த இடைவெளியைக் கடைபிடித்திட வேண்டும், சத்தான உணவு வகைகளை அருந்த வேண்டும் போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
சுதந்திர தின விழாவை வித்தியாசமான முறையில் கரோனா விழிப்புணர்வு விழாவாக நடத்திய முத்தம்பாளையம் விளையாட்டுக் குழுவினருக்கு, அப்பகுதியினர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:தந்தை இறந்த நிலையிலும், கடமையை முன்னின்று நிறைவேற்றிய பெண் காவல் ஆய்வாளர்!