ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு நகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பொதுமக்களிடையே சமூக இடைவெளி 1 மீட்டர் தூரம் அவசியம் என அறிவுறுத்தப்பட்டது. இதனை வணிக நிறுவனங்கள், காய்கறி கடைகள் கடைப்பிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு நோட்டீஸும் விநியோகிக்கப்பட்டது.
மேலும் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் முன்னெச்சரிக்கை அறிவிப்பாணை விநியோகிக்கப்பட்டது. ஆனால் சில நாள்களாக மளிகைக் கடைகள் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.
இதையடுத்து நகராட்சி ஆணையர் அமுதா, சுகாதார அலுவலர்கள் ஆகியோர் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் இன்று ஆய்வு செய்தனர். அப்போது மார்க்கெட் அருகே வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக நிற்க அனுமதியளித்த அமுதா ஸ்டோர் உரிமையாளர் ஷேக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடைக்கு சீல் வைத்து மூடப்பட்டது.
இதையும் படிங்க...சென்னையில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு!