ஈரோடு: சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் தொழிநுட்பக் கல்லூரியின் 23வது பட்டமளிப்பு விழா நேற்று (அக் 21) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி வைத்தியநாதன் பட்டங்களை வழங்கினார்.
பின்னர் அவர் மாணவர்களிடையே பேசுகையில், “மாணவர்கள் தொழில்முனைவோராக மாறி வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். முதலில் ஸ்டார்ட் அப் கம்பெனியாகத் துவங்கி அதனை விரிவுபடுத்தி, சர்வதேச நிறுவனமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
தொழில்நுட்பத்தில் இந்தியா இன்னும் முன்னேற வேண்டும். பல தொழில்நுட்பங்களில் நாம் பல்வேறு நாடுகளுக்கு அடிமையாக இருந்து வருகிறோம். உதாரணமாக, கரோனா பாதிப்பின்போது வெண்டிலேட்டர் கிடைக்காமல் ஏற்பட்ட உயிரிழப்புகள். இங்கு தொழில்நுட்பம் இல்லாதலால், நான் நிறைய நண்பர்களை இழந்துள்ளேன்.
கரோனா தடுப்பூசியை வெளிநாட்டில் இருந்து இந்தியா பெற வேண்டியிருந்தது. 6 டிகிரி சென்டிகிரேடில் மட்டுமே வேலை செய்யும் இந்த தடுப்பூசியை, நாம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்தியாவில் 30 டிகிரி சென்டிகிரேடில் பயன்படுத்தும் அளவில் 280 கோடி தடுப்பூசி தயாரித்து, பின் சாதனை படைத்துள்ளோம்.
இதையும் படிங்க: சானிடரி நாப்கினில் கடத்தி வரப்பட்ட 612 கிராம் தங்கம் பறிமுதல் - திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!
சில நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கி பெருமை சேர்த்துள்ளோம். இந்தியாவில் 140 கோடி பேரில், 30 சதவீதம் 18 முதல் 35 வயதுள்ளவர்கள் அதிகம். எனவே, அவசரகால தேவையில் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, நோபல் பரிசு பெற வேண்டும். 2047-இல் நமது இந்தியா சூப்பர் மேனாக மாற வேண்டுமெனில், தற்போதில் இருந்து தொழில்முனைவோராக மாறி, அதில் ஆழமான அறிவை பெற்று உயர வேண்டும்.
ஒரே துறையில் பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனுபவத்தைப் பெற்றால், நாம் சிறந்தவர்களாக காட்ட முடியும். நாசா செய்யாததை சந்திரயான் விண்கலம் மூலம் நாம் உலகிற்கு எடுத்துக் கூறியுள்ளோம். சந்திரயான் விண்கலம் தயாரிப்பில் ஏரோநாட்டிக்கல் மாணவர்கள் மட்டுமின்றி கணினி, கட்டுமானம், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக் போன்ற மாணவர்களின் கூட்டு முயற்சியே வெற்றிக்கான காரணமாக அமைந்தது.
வரும் காலத்தில் ரீ-சைக்கிளிங் முறையே வெற்றி பெறும். அதாவது, மறுசுழற்சி முறையில் பொருள் தயாரிப்பு. தற்போது 15 நாட்களில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது என்றால், அது நமது சாதனை” என்றார்.
இதையும் படிங்க: “வெள்ளி, செவ்வாய் கோள்களை ஆய்வு செய்யும் பணி நடைபெறும்” - ஆதித்யா L1 திட்ட இயக்குநர் நிஹார் ஷாஜி