ஈரோடு அருகேயுள்ள முத்தம்பாளையம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் தனது பாட்டியுடன் வசித்து வருபவர் பூங்கொடி. இவர் ஆங்கில பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். பூங்கொடியும் அதே பகுதியைச் சேர்ந்த ஊர்காவல் படையில் பணிபுரியும் அஜீத்குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனிடையே, அஜீத்குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி பூங்கொடியுடன் உறவில் இருந்துள்ளார். இதனால், பூங்கொடி கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து, பூங்கொடி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அஜீத்தை வற்புறுத்தி வந்துள்ளார். அப்போது, அவர் தனக்கு விரைவில் காவல்துறையில் வேலை கிடைக்கவுள்ளதாகவும், வேறு திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறி, கருவைக் கலைக்குமாறு பூங்கொடி வயிற்றை காலால் எட்டி உதைத்து கருவைக் கலைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, தனது காதலரை தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வலியுறுத்தி பூங்கொடியை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் அஜீத்குமார் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். அதைத் தொடர்ந்து காவலர்கள் உயர் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அவர்கள் முன்னிலையில் அஜீத்குமார், பூங்கொடியை திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின், பூங்கொடியை தன்னுடன் அழைத்துச் செல்ல அஜீத் மறுத்து வந்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கேட்ட போது அவர்கள் பூங்கொடியையும், அவரது பாட்டியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னை உயிருடன் சித்ரவதை செய்து வரும் அஜீத்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீண்டும் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஆனால் அந்த புகாரின் மீது காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பூங்கொடி தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத மகளிர் காவல் நிலையத்தின் மீதும், திருமணம் செய்து கொண்டு தன்னை சேர்த்துக் கொள்ளாத கணவன் மீதும், கொலைமிரட்டல் விடுக்கும் கணவரது குடும்பத்தார் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு வழங்கியுள்ளார்.
அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்து தன்னை தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:பழம்பெரும் நடிகையின் பேரனை கத்தியால் குத்திய நபர்கள்!