ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள டி.என்.பாளையத்தில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் டி.என்.பாளையம், அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 350 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட 14 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியராக உள்ள ஆனந்தன் என்பவர் மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தியாகராஜ் என்பவரின் மகள் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த இரண்டு நாள்களாக பள்ளிக்கு செல்லவில்லை.
இதைத் தொடர்ந்து, இன்று பள்ளிக்கு வந்த அந்த மாணவியை ஆசிரியர் ஆனந்தன் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசியுள்ளார். மேலும் மாணவியை பள்ளிக்குள் அனுமதிக்காமல் வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து பெற்றோரிடம் கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் 100-க்கும் மேற்பட்டோருடன் வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆசிரியரைத் தாக்க முயன்றனர். இது குறித்து, தகவலறிந்து அங்கு விரைந்து வந்த பங்களாபுதூர் காவல் துறையினர் ஆனந்தனை பெற்றோர்களிடம் இருந்து மீட்டு விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க:மாணவிகளிடம் பாலியல் சீண்டல் - ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ
!