ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப்பாதையில் 16.2 டன்னுக்கு குறைவாக பாரம் ஏற்றும் லாரிகளுக்கு மட்டுமே அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் பண்ணாரி சோதனைச்சாவடி மற்றும் காரப்பாளம் சோதனைச்சாவடியில் 16.2 டன்னுக்கு குறைவாக பாரம் ஏற்றிவரும் லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், பிற லாரிகள் திம்பம் வழியாக செல்லமுடியாமல் திருப்பி அனுப்பப்படுகின்றன.
கூடுதல் செலவு: இதற்கு லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "16.2 டன்னுக்கு குறைவாக உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டால், லாரி தொழில் முற்றிலும் பாதிக்கப்படும். இதனால், லாரி ஓட்டுநர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்க நேரிடும். திம்பம் மலைப்பாதையை தவிர்த்து மாற்று வழியில் சென்றால், ரூ.7 ஆயிரம் வரை கூடுதல் செலவாகும். அதுமட்டுமின்றி காலவிரயமும் ஏற்படுகிறது" என்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி ஈரோடு மாவட்டத்தில் சரக்கு லாரிகள் ஓடவில்லை. திம்பம் தடையை நீக்கக்கோரி சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய பகுதியில் இன்று (ஏப். 11) முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தாளவாடியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. தாளவாடி காய்கறி மண்டிகள் மூடப்பட்டதால், பரபரப்பாக இருக்கும் தாளவாடி நேதாஜி சர்கிள் வெறிச்சோடி காணப்பட்டது. சத்தியமங்கலத்தில் கடைவீதி, பேருந்து நிலையம் கடைகள், ரங்கசமுத்திரம் கோட்டுவீராம்பாளையம் பகுதியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் தினசரி சந்தை மற்றும் பூ சந்தை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'திம்பம் மலைப்பாதையில் உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தக்கோரி விவசாயிகள் போராட்டம்'