கடந்த சில ஆண்டுகளாக ஈரோடு மாவட்டக் காவல்துறை, தனியார் அமைப்பினருடன் இணைந்து கோடைக்காலத்தில் போக்குவரத்தினை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபடும் போக்குவரத்துக் காவலர்களுக்கு நாள்தோறும் நீர்மோர் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் ஈரோட்டில் போக்குவரத்து காவலர்களுக்கு வெப்பதை தணித்திடும் வகையில் நாள்தோறும் நீர்மோர் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு வழங்கும் திட்டத்தினை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டம் ஈரோடு, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம், அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய நகரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் 500க்கும் மேற்பட்ட போக்குவரத்துக் காவலர்களின் தாகத்தை தணித்திடும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
திட்டத்தினை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், நாள் முழுவதும் தகிக்கும் சூரிய வெப்பத்தில் பணியாற்றிடும் போக்குவரத்துக் காவலர்களுக்கு அவர்களின் உடல்நலத்தை காக்கும் பொருட்டும், பணிக்கு மரியாதை செலுத்திடும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது என்றும் கோடைக்காலம் முடிவடையும்வரை நாள்தோறும் நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்துக் காவலர்கள் பணிபுரியும் இடங்களுக்குத் தேடிச் சென்று நீர்மோரும், பழச்சாறும் வழங்கப்படும் என்றார்.