ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள பங்களாப்புதூர் பகுதியைச் சேர்ந்த 5 நண்பர்கள் காரில் சத்தியமங்கலத்தில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிவிட்டு காரில் சத்தியமங்கலத்திலிருந்து புஞ்சைபுளியம்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வேடசின்னானூர் பேருந்து நிறுத்தம் அருகே கார் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கோயில் அர்ச்சகர் கீர்த்திவேல் துரை 26, பனியன் கம்பெனி தொழிலாளி மயிலானந்தன் 30, ஓட்டுநர் பூவரசன் 20 ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த மென்பொறியாளர் ராகவன் 26 மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் காயம் அடைந்த இளையராஜா என்பவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சத்தியமங்கலத்திலிருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு காரில் சென்றபோது வேடசின்னனூர் என்ற இடத்தில் கார் நிலைத் தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
இதில், பலியான சதுமுகையைச் சேர்ந்த ராகவன் மற்றும் பூவரசன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள். கீர்த்திவேல் துரை என்பவருக்கு வரும் 22ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாலை விபத்தில் நான்கு நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மது போதையில் நண்பனை கொலை செய்து விட்டதாக இளைஞர் போலீசில் சரண்.. நடந்தது என்ன?