ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் ஊராட்சிக்கு உட்பட்ட அவ்வையார் பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் விஜயகுமார் (37). இவர் போர்வெல் வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று அதிகாலை, அதே பகுதியைச் சேர்ந்த மணிமோகன் என்பவர் அவரது மனைவி செல்வியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த விஜயகுமார், செல்வியை தொட்டு எழுப்பியதாகவும், செல்வி சத்தமிடவே, விஜயகுமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து விஜயகுமாரின் வீட்டிற்குச் சென்ற மணிமோகன், பூபதிராஜா, இவரது தம்பி சதீஷ்குமார், அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் உள்ளிட்ட நான்கு பேரும், விஜயகுமாரை வெளியே இழுத்துச் சென்று, நான்கு ரோடு சந்திப்பில் தடி, இரும்புக் குழாயால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மணிமோகன், பூச்சிக்கொல்லி மருந்தை விஜயகுமாரை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றியும், பூபதிராஜா, இருசக்கர வாகனத்தை விஜயகுமார் கழுத்தில் ஏற்றியும், நாகராஜ், சுடு தண்ணீரைப் பிடித்து விஜயகுமார் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த விஜயகுமாரை, அருகில் உள்ள குடிநீர் குழாய் அருகே அமர வைத்து உள்ளனர்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற விஜயகுமாரின் தந்தை ராமசாமி, அக்கா கவுரிமணி உள்ளிட்ட உறவினர்கள் விஜயகுமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர்களை தடுத்து மணிமோகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கிடையே, நீண்ட நேரமாக உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த விஜயகுமார், சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து விஜயகுமாரின் அக்கா கவுரிமணி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கோபி காவல் துறையினர் மணிமோகன், பூபதிராஜா, இவரது தம்பி சதீஸ்குமார் மற்றும் நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து கோபியில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தயாநிதி, குற்றம் சாட்டப்பட்ட மணிமோகன், நாகராஜ், பூபதி ராஜன், சதீஷ்குமார் ஆகிய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். ஆயுள் தண்டனை மற்றும் மற்ற பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, நான்கு பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ரூ.20 கோடி கடனுக்காக ஈரோட்டில் டெக்ஸ்டைல் மில் உரிமையாளர் தற்கொலை.. நடந்தது என்ன?