ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தாளவாடி, கடம்பூர், பவானிசாகர் ஆகியப் பகுதிகளில் ஏராளமான சிறுத்தைகள், புலிகள், யானைகள் உள்ளன. தாளவாடி மலைப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதனால், வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் ஊருக்குள் இருக்கும் தோட்டங்களுக்குள் புகுந்து, அங்கிருக்கும் கால்நடைகளைத் தாக்கி வருகின்றது. அண்மையில் பெரியகுளம் என்ற இடத்தில் தினேஷ் என்பவருக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை குட்டி ஈன்றது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நகரப் பகுதியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் செண்பகப்புதூர், மேட்டூர் என்ற இடத்தில் விவசாய நிலத்துக்குள் புகுந்த சிறுத்தை, ரங்கசாமி செட்டியார் என்பவருக்குச் சொந்தமான ஆட்டை அடித்துக் கொன்றது.
இந்நிலையில், அதிகாலை களையெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிறுத்தை ஓடுவதைப் பார்த்து, வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் சிறுத்தை நடமாடிய வழித்தடத்தில் கேமராக்கள் பொருத்தி, நடமாட்டத்தைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சத்தியமங்கலம் - கோபி சாலையில் நள்ளிரவில் காரில் சென்றுகொண்டிருந்த ஒருவர், சிறுத்தை போன்ற விலங்கு ஒன்று ஓடுவதைப் பார்த்து, அப்பகுதியில் உள்ள மக்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், சிறுத்தை ஓடிய சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்த வனத்துறையினர், அதில் பதிவான காட்சிகளை வைத்து அது சிறுத்தை என்பதை உறுதி செய்தனர்.
இதேபோல், அதே பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநர், வாழைத் தோட்டத்தில் இருந்து சாலையின் குறுக்கே சிறுத்தை ஓடுவதைக் கண்டு, கிராம மக்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்ததில், சிறுத்தை சாலையைக் கடந்து செல்வது பதிவாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் இரவு நேரத்தில் குடியிருப்பை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
பல இடங்களில், சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும் அவற்றில் சிக்காமல் வனத்துறையினருக்கு டிமிக்கி காட்டி விட்டு, ஊருக்குள் உலாவி வருகின்றது. சிறுத்தை தினந்தோறும் 25 கி.மீ., பயணிக்கும் என்பதால் அது எங்கு உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பதில் வனத்துறையினருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் சிறுத்தையைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம்!