ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவதும், தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதி மல்குத்திபுரம் கிராமத்தில் விவசாயி குருசாமிக்குச் சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. இந்த கரும்பு தோட்டத்துக்குள், நேற்று (டிச.26) மாலை சிறுத்தை நடமாடுவதாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஆசனூர் மாவட்ட வன அலுவலர் அறிவுரையின் பேரில், தாளவாடி வனச்சரகர் சதீஷ் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் குருசாமியின் கரும்பு தோட்டத்துக்குச் சென்றனர்.
அப்போது கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தையை விரட்டுவதற்காக, வனத்துறை ஊழியர்கள் பிரத்யேக கவச உடையை அணிந்தபடி துப்பாக்கி உடன் கரும்பு தோட்டத்துக்குள் ரோந்து சென்றனர். தொடர்ந்து அங்கு பதுங்கி இருந்த சிறுத்தையை, வனத்துறை ஊழியர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஈரோடு கிராமங்களில் வேகமாக பரவும் அம்மை நோய்!