ஈரோடு: சித்தோடு கங்காபுரம் கன்னிமார் விநாயகர் மாரியம்மன் மலைக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் நல்ல காரியங்களுக்கும், கோயிலின் பூஜைகள் நடத்துவதற்கும் 1886 ஆம் ஆண்டு மைசூர் மகாராஜா 8 ஏக்கர் 59 சென்ட் நிலத்தைத் தானமாக வழங்கி உள்ளனர்.
கங்காபுரம் பகுதியில் மணியக்காரர் என்று கூறப்படும் கிராம நிர்வாக அலுவலராக அப்போது பணியாற்றிய முத்து வெங்கட்ராயன் கவுண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மைசூர் மகாராஜாவால் தானமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் வருவாய்க் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மேல்முறையீடு செய்து நிலத்தை மீட்டு உள்ளனர். ஆனாலும் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார். அதனை எதிர்த்து கிராம மக்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிமன்றத்திலும் நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என உத்தரவு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: வேலுமணியுடன் இருந்தால் பிரச்சனை இல்லை; எதிரணியில் இருந்தால் காணாமல் போவாய்: வானதிக்கு வார்னிங் கொடுத்த சி.பி.ஆர்!
இருப்பினும் கிராம நிர்வாக அலுவலராக இருந்த முத்து வெங்கட்ராயன் கவுண்டர் மறைவுக்குப் பின்பு அவரது வாரிசுகள் அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பல நூறு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என அறிவித்து உத்தரவிட்டது. மேலும் இந்து அறநிலையத்துறையின் மூலம் நிலத்தை வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் மூலமாக அளவீடு செய்து மீட்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
தற்போது இந்த நிலமானது வீட்டு மனைகளுக்காக பல்வேறு நபர்களுக்குப் பிரித்து விற்கப்பட்டு வீடுகளாகக் கட்டி முடிக்கப்பட்டும், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. இந்நிலையில் இன்று காலை நீதிமன்ற உத்தரவின் படி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறையினர் நில அளவையாளர்கள் ஆகியோர் காவல் துறையின் பாதுகாப்புடன் கோயிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் 59 சென்ட் நிலத்தை அளவிடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும் வீட்டு மனைகளாகப் பிரித்து விற்கப்பட்டவர்களுக்கு அவகாசம் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகைத் திட்டப்பதிவு... வந்தது இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பணி!