மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குருமந்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் திருப்பூரிலிருந்து வந்த ஆம்னி வேனில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.69 ஆயிரத்து 500 ரொக்கத்தை பறிமுதல் செய்யப்பட்டு அந்த பணம் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது..
மேலும், கோட்டாட்சியர் மேற்கொண்ட விசாரணையில் பணத்தை கொண்டு சென்றவர்கள், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆட்டு வியாபாரிகள் நடராஜன் கருப்புசாமி மற்றும் பெரியசாமி என தெரியவந்தது. அதுமட்டுமின்றி, இவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் சத்தியமங்கலம் பகுதிகளில் ஆடுகளை கொள்முதல் செய்து திருப்பூர் பகுதிக்கு கொண்டு சென்று ஆட்டு இறைச்சி கடையை நடத்தி விற்பனை செய்துவருவதாகவும் நேற்று காலை 12 ஆடுகளுடன் திருப்பூர் சென்று ஆட்டு இறைச்சி விற்பனையை முடித்துக்கொண்டு மீதம் உள்ள இரண்டு ஆடுகளுடன் திரும்பி வந்தாகவும் தெரியவந்தது.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில்தான் மேலும் வியாபாரம் செய்யவேண்டும் இல்லாவிடில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், ஆடுகள் விற்பனை செய்தற்கு எந்தவித ஆவணங்களும் இல்லை என்றும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.