ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள புங்கன்காட்டூர் பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் மெத்தை தயாரிக்கும் குடோன் வைத்துள்ளார். இங்கு 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மெத்தை தயாரித்தலுக்கான தேங்காய் நார் பண்டல்கள், இயந்திரங்கள் ஆகியவை இக்குடோனில் உள்ளன.
இந்நிலையில் குடோனில் மின் கசிவினால் தீடீரென ஏற்பட்ட தீவிபத்தில் தேங்காய் நார் பண்டல்கள், இயந்திரங்கள் ஆகியவை தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனைக் கண்ட அங்குள்ள பணியாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. தீ அதிகம் பரவத் தொடங்கியதும் கோபிச்செட்டிப்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். இத்தீவிபத்தால் தேய்காய் நார் பண்டல்கள், இயந்திரங்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீவிபத்து குறித்து சிறுவலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பின்னலாடை நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்!