ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த புதுப்பீர்கடவு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கால்நடை வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் காவலுக்கு வளக்கும் நாய்களை சிறுத்தை வேட்டையாடி வந்துள்ளது. இந்நிலையில் இவரது நாய் திடீரென காணாமல் போய்விட்டது. இதையடுத்து நாயை தேடிய போது அப்பகுதியில் உள்ள புங்க மரத்தின் மேல் கிளையின் நாயின் உடல் பாதி தின்ற நிலையில் காயங்களுடன் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சிவக்குமார் இது குறித்து உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாடியதும், சிறுத்தை நாயை வேட்டையாடி உடலை தூக்கிச் சென்று மரத்தின் மீது வைத்து பாதி உடலை தின்றுவிட்டு மீதி உடலை விட்டு சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே இவரது தோட்டத்தின் அருகே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வனத்துறையினர் வைத்த கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் சிறுத்தை நடமாடியதால் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க மீண்டும் கூண்டு வைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்து நிலையம்... முதலமைச்சர் ஆய்வு...