ஈரோடு: சித்தோடு ராயபாளையம் பகுதியைச்சேர்ந்தவர் சென்னியப்பன், வளர்மதி தம்பதியினர். இவர்களுக்கு மங்கையர்க்கரசி என்ற மூத்த மகளும், பிருந்தா என்ற இளைய மகளும் உள்ளனர். இளைய மகள் பிருந்தா கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக கார்த்திக் என்பவருடன் திருமணம் ஆகி வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் பிருந்தா தனது வீட்டில் இறந்துகிடப்பதாக வந்த தகவலை அடுத்து பிருந்தாவின் பெற்றோர்கள் சென்று பார்த்துள்ளனர். பிருந்தா தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று நினைத்து, சித்தோடு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல்துறையினர் வீட்டில் உயிரிழந்துகிடந்த பிருந்தாவின் உடலை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிருந்தாவின் உடலைப்பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததற்கான தடயங்கள் உள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச்சேர்ந்த அரவிந்த் என்பவனை சித்தோடு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிருந்தா கல்லூரியில் படிக்கும் போதே தனது கணவரான கார்த்திக் என்பவர் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் பிருந்தாவிற்கு உறவினரின் வீட்டிற்கு பக்கத்தில் வசித்த ஒருவர் மூலமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச்சேர்ந்த அரவிந்திடமும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரே சமயத்தில் பிருந்தா கார்த்திக் மற்றும் அரவிந்த் இருவரையும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக் பிருந்தாவை திருமணம் செய்து ஒன்றரை ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த திருமண வாழ்க்கையில் கருவுற்ற பிருந்தா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் காதலனான அரவிந்துடன் பிருந்தா தொலைபேசியில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. பிருந்தாவின் கணவரான கார்த்திக், வெளியூர் சென்ற நிலையில் பிருந்தாவிற்குப் போன் செய்த முன்னாள் காதலன் அரவிந்த், ’உன்னைப் பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளான்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிருந்தாவின் வீட்டிற்கு வந்த அரவிந்த், ’உன்னை என்னால் மறக்க முடியவில்லை, நாம் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று கூறியுள்ளான்.
அதற்கு பிருந்தா நான் இப்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், என்னால் வர முடியாது எனவும் மறுத்துள்ளார். அப்படி என்றால் இரண்டு பேரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என அரவிந்த் பிருந்தாவிடம் கூறியுள்ளான். அப்போது நடந்த தகராறில் வீட்டில் தனியாக இருந்த பிருந்தாவை, கழுத்தை நெரித்து, அரவிந்த் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
கொலை வழக்காகப்பதிவு செய்து 24 மணி நேரத்தில் தனிப்படை அமைத்து முன்னாள் காதலன் அரவிந்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருமணத்திற்குப் பிறகும் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக நான்கு மாத கர்ப்பிணி கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க! - ஓபிஎஸ்