தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச பள்ளி சீருடை, வேட்டி, சேலை ஆகியவை ஈரோடு மாவட்டத்தில் 48 கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இப்பணியின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் லட்சக்கணக்கான விசைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுகின்றனர்.
2013ஆம் ஆண்டு இலவச, வேட்டி, சேலை உற்பத்திக்கான கூலி 21.60 பைசா வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 39 ரூபாய் 27 பைசா வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் உற்பத்திக்கான கூலியை உயர்த்தி வழங்கக் கோரி துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இது குறித்து , ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் கூறுகையில், 'ஈரோடு மாவட்டத்தில் லட்சக்கணக்கான நெசவாளர்கள் இலவச, வேட்டி, சேலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடை ஆகியவற்றின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
வேலையாட்கள் கூலி, போக்குவரத்து என இதர செலவுகள் அதிகரித்துவரும் நிலையில் தொடர்ந்து பழைய கூலிக்கு துணிகளை உற்பத்திசெய்து வருகிறோம். ஆகையால் அரசு இலவச வேட்டி, சேலை உற்பத்திக் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.