ஈரோடு: ஈரோடு எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். நூல் வியாபாரியான இவர் லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளதால் தனது வருமானத்தின் பெரும்பகுதியைக் கொண்டு லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார்.
இதனிடையே நேற்றிரவு (மே13) ராதாகிருஷ்ணன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்ற லாட்டரி ஏஜென்டிடம் லாட்டரி வாங்கி இதுவரை ரூ.62 லட்சத்தை தான் இழந்துள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட வேதனையிலும், உயிருடன் இருந்தால் மேலும் அடிமையாகி விடுவேன் என்பதால் தற்கொலை செய்து கொள்வதாகவும், அனைவரும் மன்னித்து விடும்படி வீடியோவில் தெரிவித்து இருந்தார்.
மேலும் இழந்த பணத்திலிருந்து லாட்டரி ஏஜென்டிடம் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாகப் பணத்தைப் பெற்றுத் தருமாறும் , தமிழ்நாடு அரசு ஈரோட்டில் மறைமுகமாக நடந்து வரும் லாட்டரி சீட் தொழிலை ஒழிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே ராதாகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றிய ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருங்கல்பாளையம் லாட்டரி ஏஜென்ட் செந்தில்குமார் திமுகவைச் சேர்ந்தவர் என்பதும், இவரது மனைவி கீதாஞ்சலி ஈரோடு மாநகராட்சி 39ஆவது வார்டு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பனை - தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது