கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, சிறு தொழில்கள் முதல் பெருந்தொழில்கள் வரை தற்காலிகமாக மூடப்பட்டன. நோய்ப் பாதிப்பு முற்றிலும் குறைந்ததுடன், சிவப்பு நிற மண்டல மாவட்டமாக இருந்த ஈரோடு மாவட்டத்தில் கடந்த 30 நாள்களுக்கும் மேலாக நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்படாததால், ஆரஞ்ச் நிற மண்டலத்திலிருந்து பச்சை நிற மண்டலமாக இருந்து வருகிறது.
நோய்ப் பாதிப்பு குறைந்ததன் காரணமாக தொழில்களுக்குத் தளர்வு அறிவிக்கப்பட்டும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு உரிய ஆலோசனைகளுக்குப் பிறகு, 1000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மஞ்சளுக்கு அடுத்த முக்கியத் தொழிலாக விளங்கி வரும் ஜவுளித் தொழில் முற்றிலும் முடங்கிய நிலையில் காணப்படுகிறது. இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், "ஈரோட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடை ரகங்கள், துண்டுகள், போர்வைகள், லுங்கிகள், உள்ளாடைகள் உள்பட அனைத்துத் தரப்பினருக்கும் தேவையான ஜவுளிகளை விற்பனை செய்பவர்கள் உள்ளனர்.
இதனை நம்பி நேரடியாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களும் மறைமுகமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். கூட்டம் அதிகம் கூடி நோய்ப் பரவலுக்கு காரணமாக அமையும் என்பதால், ஜவுளித் தொழில் நிறுவனங்கள், ஜவுளிச் சந்தைகளுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால், கரோனாவுக்கு முன்னதாக உற்பத்தி செய்யப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோடைகால ஜவுளி ரகங்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கிறது. கோடை காலம் முடிவடைவதற்குள் ஜவுளிக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டால் தான், கோடைக் காலங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய, காட்டன் வகை துணி ரகங்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள அனைத்து ஜவுளி ரகங்களையும் விற்பனை செய்து, எங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பினை ஓரளவுக்கு ஈடுகட்ட முடியும். விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் வருவாயின்றி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வெளிமாவட்டங்கள், வெளி மாநிலத்தவர்கள் கோடை கால ஆடைகளின் தேவைக்கான முன்பணத்தை செலுத்தியிருந்தும் அவர்களுக்கான ஆடை ரகங்களை அனுப்பி வைக்க முடியாமல் போனது. நாங்கள் கொடுத்திருந்த காசோலைகளையும் வங்கிக்கு அனுப்பி, பணமாக்க முடியாததால் எங்களை நம்பியுள்ள வியாபாரிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, ஜவுளித் தொழிலை மட்டும் நம்பி வாழ்ந்து வரும் ஜவுளித் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணத் தொகையை வழங்கி, அவர்களைப் பாதுகாத்திட வேண்டும். ஏனைய தொழில்களுக்கு கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதிப்பதைப் போல் எங்களுக்கும் கட்டுப்பாடுகளுடன் தொழிலை மேற்கொள்ள விலக்கு அளித்து, அனுமதித்து தொழிலையும் நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:அரசு உத்தரவை மீறி வியாபாரம் செய்த ஜவுளிக்கடை - அபராதம் விதித்து நடவடிக்கை