ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு மாவட்டம் முழுவதும் முக்கிய தொழில்களைக் கொண்ட தொழிற்சாலைகள் அரசின் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தளர்வுக்குப் பிறகு கால்வாய் மற்றும் நீர் நிலை கரையோர பகுதிகளில் அமைந்துள்ள சாயம், சலவை, தோல் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஈரோடு பிராமண பெரிய அக்ரஹாரம் அருகேயுள்ள காலிங்கராயன் கால்வாய் மற்றும் சுண்ணாம்பு ஓடைப்பகுதிகளில் சாயம் கலந்த நீர் சென்று கொண்டிருப்பதாகவும், கடந்த 60 நாட்களுக்கு மேலாக சுத்தமான முறையில் சென்று கொண்டிருந்த தண்ணீர் தற்போது கழிவு நீர் கலந்து செல்வதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
அப்புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர் உதயகுமார் தலைமையிலான அலுவலர்கள் குழு, காலிங்கராயன் கால்வாய் மற்றும் சுண்ணாம்பு ஓடைப் பகுதியிலுள்ள தண்ணீரை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது, அப்பகுதியில் வழக்கம் போலவே சாதாரண உப்பு அளவில்தான் தண்ணீர் சென்று கொண்டிருப்பதாகவும், இந்தளவு உப்பில் மக்கள் தண்ணீரை பயன்படுத்தினால் எவ்வித பாதிப்புமில்லையென்றும் அலுவலர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீர் நிலைப் பகுதிகளில் அமைந்துள்ள சாயம், சலவை, தோல் தொழிற்சாலைகளிலிருந்து கழிவு நீரை திறந்து விடுவதற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எச்சரிக்கையை மீறி கழிவு நீர் நிலைகள் கலக்கப்படுவது கண்டறியப்பட்டால் அந்தத் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அக்குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊரடங்கால் சிப்காட் தொழிற்பேட்டை மூடல்; மாசு குறைந்ததால் மக்கள் நிம்மதி