ஈரோடு மாவட்டம் அறச்சலூர் தனியார் கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திட வலியுறுத்தி கல்லூரி மாணவியர்களுக்கான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தனர்.
இந்தப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். மினிமாரத்தான் போட்டியின்போது இயற்கையைப் பாதுகாத்திடுவதற்குரிய நடவடிக்கையாக மரங்களை அதிகளவில் நட்டு பாதுகாத்திட வேண்டும், தமிழகத்தை பசுமைப் பகுதியாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், கழிவுகள் இல்லாத தெருக்களை உருவாக்குவதுடன் தூய்மையாக வைத்துக்கொள்ள அனைத்து மக்களும் ஒத்துழைத்திட வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய மினி மாரத்தான், திண்டல் மலையில் முடிவடைந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: வெள்ளம் பாதித்த 121 குடும்பங்களுக்கு வீடுகள் - ராமோஜி குழுமம் உதவிக்கரம்