ஈரோடு கருங்கல்பாளையம் அருகேயுள்ள இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகன் சதீஷ் இரண்டு சக்கர வாகனங்களை பழுது நீக்கும் தொழில் மேற்கொண்டு வந்தார். கல்லீரல், மூச்சுத்திணறல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்ட இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இருப்பினும், அவர் அந்த பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடையாமலே வாழ்க்கையை நடத்திவந்தார்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் சதீஷின் உடல்நிலை மோசமாகவே ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்ததன் பேரில் சேலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கும் சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் இல்லையென்று கூறி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சதீஷ் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அனுமதிக்கப்பட்ட சதீஷ், சிகிச்சை பலனின்றி கடந்த 15ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே ஜிப்மர் நிர்வாகம் சதீஷ் கரோனா நோய்த்தொற்று காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும், உடலை தமிழ்நாடு கொண்டு செல்ல வேண்டுமென்றால் உடலைப் பெற்றுச் செல்வதற்கான அனுமதிக் கடிதமும், கிராம நிர்வாக அலுவலரை உடன் அழைத்து வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் வந்த செல்லமுத்துவுக்கு அனுமதிக் கடிதத்தை மட்டும் வழங்கிய வருவாய்த்துறையினர், அலுவலரை உடன் அனுப்ப முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதனால், என்ன செய்வதென்றே தெரியாமல் செல்லமுத்து வேதனையில் உள்ளார்.
இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மாவட்ட சுகாதாரத்துறையினரை ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச வைக்கவுள்ளதாகவும், அலுவலரின்றி உடலை தமிழ்நாடு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா!