ஈரோடு: கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் அதனைச் சுற்றியுள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. முதல் போக சாகுபடிக்காக கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 19ஆம் தேதிவரை என 120 நாள்கள் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த பாசனத்தின் மூலம் விவசாயிகள் இட்லி குண்டு, ஏ.எஸ்.டி 16, பொன்னி, சம்பா உள்ளிட்ட நெல் வகைகளை நடவு செய்திருந்தனர். செங்களரை பகுதியில் தற்போது 120 நாள் பயிரான ஏ.எஸ்.டி 16 வகை நெல் அறுவடை செய்யும் பணிகள் கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கியது. அரசு சார்பில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்களை கொள்முதல் செய்ய புளியம்பட்டி, ஏளுர், கரட்டடிபாளையம், புதுவள்ளியாம்பாளையம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டன.
நெல் கொள்முதல் செய்யப்படவில்லை
செங்களரை பகுதி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்த நெல்களை கரட்டடிபாளையம் அரசு கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அரசு நிர்ணயம் செய்த 17 விழுக்காட்டிற்கு மேல் ஈரப்பதம் இருந்ததால் விவசாயிகளின் நெல்கள் கொள்முதல் செய்யப்படாமல் வளாகத்திலேயே கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
அரசுக்கு கோரிக்கை
தற்போது மழை காரணமாக நெல்கள் மழையில் நனைந்து சேதமடைய வாய்ப்புள்ளதாகவும், நெல்களின் ஈரப்பதம் குறையாமல் மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும், மேலும் நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பத அளவை 25 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். நெல்கள் கொள்முதல் செய்யப்படாததால் அறுவடை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆசிரியர் தினம்: பிரம்படி வாங்கி வாழ்த்து கூறிய முன்னாள் மாணவர்கள்