ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே கடம்பூர் மலை அடிவாரத்தில் உள்ள பெரும்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை வேகமாக நிரம்பிவருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அணை வறண்டு இருந்து நிலையில், தற்போது 31 அடி நீர்மட்டம் கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 23 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர்இருப்பு இல்லாத போது, பெரும்பள்ளம் நீர்ப்பிடிப்பு பகுதியில் கெம்பநாயக்கன்பாளையம் கிராம மக்கள் ராகி, கம்பு, சோளம் சாகுபடி செய்திருந்தனர்.
தற்போது சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதி முழுவதிலும் உள்ள விவசாய நிலங்களில் நீர் புகுந்துள்ளது. அதனால் 65 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்ட அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி, ஓரிரு நாளில் மூழ்கும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனால் பத்தாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்த சோளம், கம்பு பயிர்கள் நீரில் மூழ்குவதால், அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரும்பள்ளம் நீர்வழிப்பாதை அருகே அமைக்கப்பட்டிருந்த ஆட்டுப்பட்டியில் வெள்ளநீர் புகுந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த செல்வி, ஐயப்பன் உட்பட ஐந்து விவசாயிகளுக்கு சொந்தமான 10 ஆடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
இதனால், விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதி மக்கள், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட ஆடுகளுடன், நீரில் மூழ்கிய விவசாய பயிர்களுக்கும் சேர்த்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: ஈரோட்டில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம்!