ஈரோடு மாவட்டத்தில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை தலைமையிலான பொது நிறுவனங்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் அன்பில்மகேஷ், கோவி.செழியன், நல்லதம்பி, சண்முகம் உள்ளிட்ட ஏழு எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செம்மலை, 'போக்குவரத்து பணிமனையில் அதிகப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கு கழிவுகள் முறையாக அகற்றப்பட்டு மாசுக்கட்டுபாட்டு வாரிய விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறது.
ஈரோட்டில் இரண்டு நாட்கள் ஆய்வு பணிகள் நடக்கும். குடிநீர் வடிகால் வாரியம், அரசு மருத்துவமனை, பவானிசாகர் அணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்படும்' என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'தற்காலிக தொழிலாளர்கள் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக, அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் நிரந்த ஊழியர்களாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட தனியார் பேருந்துகள் குறைந்த கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பேருந்துகளால் அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டமடைகிறது' எனவும் எச்சரித்தார்.
முன்னதாக கோவையிலிருந்து ஈரோட்டிற்கு தனியார் பேருந்தில் 64 ரூபாயும், அரசுப் பேருந்தில் 84 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் 1 to 1 அரசுப்பேருந்தில் 93 ரூபாயும் கட்டணம் பெறப்படுகிறது.
அதிமுகவின் மூத்த நிர்வாகியான செம்மலையும், திமுகவின் தலைமைக்கு நெருக்கமானவரான அன்பில் மகேஷும் மக்களின் பணிகளுக்காக ஒன்று கூடியிருப்பது அரசியல் அரங்கில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், தேனிக்கு வருகைதந்த திமுகவின் பொருளாளர் துரைமுருகனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
முன்னதாக சட்டப்பேரவையில் எதிரிக்கட்சிகளாக செயல்பட்டு வந்த அதிமுகவும் திமுகவும் மக்களின் பணிகளுக்காக ஒன்றுகூடியிருப்பது ஆச்சர்யத்தை தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.