நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கரோனா வைரசால் மிகப்பெரிய பாதிப்பைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய நோய்த்தொற்று வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மதிய நிலவரப்படி இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெறும் தினசரி காய்கறி சந்தையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவருகின்றனர். தினசரி காய்கறி சந்தை அமைந்துள்ள இடம் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் மக்களும் ஒருவர் மீது ஒருவர் முட்டிமோதி காய்கறிகளை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் தினசரி காய்கறி சந்தையை இடவசதியுள்ள பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக மாற்றம் செய்யவேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் இன்று காலையில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி சந்தையை ஏற்படுத்த அவர் மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி நாளை பேருந்து நிலையத்தில் அமைய உள்ள தினசரி காய்கறி சந்தைக்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேரில் பார்வையிட்டார்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்'