திருப்பூர் தொகுதி மக்களவை வேட்பாளர் எம்.எஸ் ஆனந்தனை ஆதரித்து பெருந்துறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மக்களை கவர அரைகுறை ஆடையுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த அரைகுறை ஆட்டத்தை அதிமுக தொண்டர்கள் ரசித்தனர். அதோடு மட்டும் அல்லாமல் நடனம் ஆடிய பெண்களுக்கு பரிசுத்தொகைகளையும் அளித்தனர்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் கலந்துகொள்ளும் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் இதுபோன்ற கன்றாவியான ஆட்டங்களை வைத்து மக்களை மதிமயக்க வைக்கும் கேடான செயல் கண்டிக்கத்தக்க வைக்கும் வகையில் உள்ளது என ஒருசாரார் குற்றஞ்சாட்டினர்.
இதனைத்தொடர்ந்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர் பழனிசாமி மக்கள் முன்பு உரையாற்றினார். அதில், 'அதிமுக அங்கம் வைக்கும் கூட்டணி மத்தியில் அமைந்தால் தமிழகத்தின் தேவைகள் நிறைவேற்றப்படும். திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்பத்திற்கு மட்டுமே நன்மை கிடைத்தது. நடப்பது மக்களவை தேர்தல் என்று தெரியாமல் சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கையை திமுக வெளியிட்டு மக்களை குழப்பி வருகிறது.
மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களின் வாக்குகளை பெற நினைக்கின்றார். வைகோ திமுகவை விட்டு சென்றபோது கம்பெனி கட்சி என விமர்சித்துவிட்டு தற்போது மீண்டும் திமுகவில் இணைந்திருப்பது மக்களை ஏமாற்றும் சதி. அவரது சின்னத்தை கைவிட்டு திமுக சின்னத்தில் நிற்கின்றார்.
விவசாயியாக இருக்கும் எனக்கு விவசாயிகள் பிரச்னையை உணர முடியும்' என்றும் அவர் தெரிவித்தார்.