ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வே.ரா திருமகன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் அறிவித்தது. கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ஆம் தேதி நிறைவு பெற்றது.
ஒட்டுமொத்தமாக இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், மற்றும் சுயேச்சைகள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகளாக 32 மையங்கள் கண்டறியப்பட்டு துணை ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தேர்தல் பணியில் 1,206 ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இடைத் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. ஏறத்தாழ 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் - இன்று வாக்குப்பதிவு!