ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மேற்பகுதி கரை ஒன்பது கிலோமீட்டர் நீளமுள்ளதாகும். அணையின் கரையை ஒட்டியுள்ளப் பகுதிகளில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று அணையின் மேற்பகுதியில் உள்ள சாலையோரம் தடுப்புச்சுவரை ஒட்டி, ஒரு மலைப்பாம்பு சுருண்டு படுத்திருந்ததைக் கண்ட, கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
அணையின் கரையை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளதால் அணையின் மேற்பகுதியில், மலைப்பாம்புகள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. சுருண்டு படுத்துள்ள மலைப்பாம்பு இரையை விழுங்கியதால் நகராமல் படுத்திருந்தது. மேய்ச்சலில் ஈடுபடும் ஆடுகளை மலைப்பாம்பு பிடித்து, இரையாக உண்ண வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் கால்நடைகளை மேய்ப்போரும், அணை நீர்த்தேக்கப்பகுதியில் மீன்பிடிக்க செல்வோரும் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, இரை விழுங்கிய மலைப்பாம்பு வனத்திற்குள் சென்றுவிடும் என்பதால், சுருண்டு படுத்துள்ள மலைப்பாம்பை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தொலைக்காட்சிப் பெட்டிக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு