ஈரோடு : அந்தியூர் அடுத்துள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம்முதல் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
ஏல விற்பனைக்கு சென்னம்பட்டி, சனி சந்தை, ஜரத்தல், ஆனந்தம் பாளையம், நெருஞ்சிப்பேட்டை, ஊமாரெட்டியூர், குருவரெட்டியூர், குறிச்சி, பூனாட்சி, சித்தார் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மாசி பட்டத்தில் பருத்தி பயிரிட்டு, தற்போது விளைவித்த பருத்தியை விற்க கொண்டுவருவது வழக்கம்.
இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற ஏல விற்பனைக்காக 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மொத்தமாக 9 ஆயிரத்து, 710 பருத்தி மூட்டைகளை ஏல விற்பனைக்காக கொண்டுவந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 74.37ஆகவும், அதிகபட்சமாக ரூ. 80.66ஆகவும் விலை போனதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏல விற்பனையில் மொத்தமாக 2 கோடியே, 67 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது. இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், ”இந்த வாரம் நடைபெற்ற ஏல விற்பனையில் கிலோ ஒன்றுக்கு ரூ. 80-க்கு பருத்தி ஏலம் போனது பருத்தியின் உச்ச விலையாகும்.
குறிப்பாக சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியிலுள்ள பருத்தி ஆலை அலுவலர்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.
கொங்கணாபுரம் பகுதியில் செயல்படும் பருத்தி ஆலை, அலுவலர்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பருத்தி கொள்முதல் செய்யவந்தால், பருத்தி கூடுதல் விலைக்கு விலை போகும்.
பருத்தியை ஈரோடு, கரூர், திருப்பூர், அவிநாசி, கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆலை அலுவலர்களும் வாங்கிச் சென்றனர்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!