ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியை சேர்ந்தவர் நந்தகுமார்(16) இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கதிரேசன்(14) ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தார்.
நந்தகுமார், கதிரேசன் இருவரும் அவர்களின் நண்பர்களுடன் கல்குவாரி பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நந்தகுமார் அங்கு இருந்த சுமார் 20 அடி ஆழமுள்ள பாழடைந்த கல்குவாரியில் தவறி விழுந்துள்ளார். அதை பார்த்த கதிரேசன், நந்தகுமாரை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அவரும் கல்குவாரியில் விழுந்தார். அப்போது இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
அதை பார்த்த நண்பர்கள் அலறியடித்துக் கொண்டு ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களின் உறவினர் குழந்தை சாமி என்பவர் கல்குவாரிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி பலியான இருவரை மீட்டார்.
மேலும் இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்விற்கு கோபிசெட்டிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.