ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. அணைப்பூங்காவை ஒட்டியுள்ள வனத்தில் இருந்து வரும் யானைகள் இரவு நேரங்களில் பழத்தோட்டத்தில் முகாமிடுகின்றன. இதனால் பாதுகாப்பு கருதி இரவுநேர அணை நீர் தேத்கப்பகுதி கணக்கெடுப்புக்கு செல்லும் பணியாளர்கள் மாற்றுப்பாதை வழியாக சென்றுவருகின்றனர்.
யானைகள் ஊருக்குள் புகாதபடி அணைப்பழத்தோட்ட நுழைவாயில் கேட்டை பூட்டி வைப்பது வழக்கம். இந்நிலையில் சில நாள்களாக அணை கேட் பகுதிக்கு வந்த ஒற்றையானை கேட்டை திறந்து வெளிய வர தொடங்கியது. இதனையடுத்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து துரத்தினர். இந்நிலையில் நேற்றிரவும் (நவ.16) யானை பழத்தோட்ட கேட்டை திறந்து வெளியேறியது. அங்கிருந்து புங்கார் சாலையில் நடந்து சென்றதால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசுவெடித்தும் சப்தம் போட்டும் யானையை துரத்தினர். தினந்தோறும் யானைகள் வரத் தொடங்கியதால் புங்கார் காலனி மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் ஊருக்குள் புகாதபடி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:கோயில் யானை அபயாம்பிகை மழையில் நனைந்து குதூகலம்!