சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை லாரியில் ஏற்றி ஆசனூர் வழியாக சத்தியமங்கலம் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்வர்.
இந்நிலையில் தாளவாடியில் இருந்து புறப்பட்ட கரும்பு லாரி ஒன்று ஆசனூரில் உள்ள ஒரு உணவகம் முன்பு டீசல் இல்லாமல் நின்றது. லாரியை அதே இடத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் டீசல் வாங்க சென்றுள்ளார். அப்போது ஆசனூர் வனப்பகுதியில் கரும்பு லாரி நிற்பதை அறிந்த ஆண் யானை, லாரி நின்ற இடத்திற்கு வந்து நடுரோட்டில் லாரியில் இருந்த கரும்புகளை முறித்து சாப்பிட்டன. இதனால் சத்தியமங்கலம், மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயக்க முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையின் நடுவே லாரி நின்றதால் யானைக்கு பயந்து வாகனங்கள் வரிசையாக காத்திருந்தன. சுமார் ஒரு மணி நேரமாக யானை கரும்பு லாரியில் இருந்து கரும்பு சாப்பிட்டப்படி காணப்பட்டது. இதனை ஆர்வமாக அங்கிருந்த வாகன ஓட்டிகள் தங்களது செல்ஃபோனில் படம் பிடித்தனர். பின்னர் யானை சாலையோரமாக சென்று, அங்கிருந்தபடி கரும்புகளை சாப்பிட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர், யானையை காட்டுக்குள் துரத்தினர். அதன்பின் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.