ஈரோடு: ஈரோடு மாவட்டம், சித்தோடு அடுத்துள்ள ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல், இவர் சத்தி-ஈரோடு மெயின் ரோட்டில் உள்ள பைபாஸ் பாலம் அருகே செந்தமாக ஸ்ரீ குமரன் ஆட்டோ கேர் என்ற கார் பழுது நீக்கும் மையத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு சித்தோட்டில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. பலத்த மழையின் காரணமாக சத்தி-ஈரோடு மெயின் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கு திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மேடான பகுதியில் இருந்த தனியார் மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதே நேரத்தில் கார் பழுது நீக்கும் நிறுவனத்தின் 8 கார்கள் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மழையினால் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 8 கார்கள் மீது விழுந்ததில் கார்கள் அனைத்து நொறுங்கி சேதமடைந்தன. இச்சம்பவம் நடந்தது இரவு நேரம் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: Kumbakkarai Falls: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
இது குறித்த தகவல் கிடைத்ததும் (செப்டம்பர் 1ஆம் தேதி) மறுநாள் அதிகாலை குழந்தைசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது 8 கார்கள் சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து குழந்தைசாமி சித்தோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வரும் சக்திவேல் என்பவர் புதிதாக திருமண மண்டபம் கட்டி வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சித்தோடு காவல் துறையினர் திருமண மண்டப உரிமையாளரான டாக்டர் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 8 கார்கள் சேதம் அடைந்தது குறித்து கார் பழுது நீக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் குழந்தைவேல் கூறுகையில், திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் விழுந்ததில் 8 கார்கள் முற்றிலுமாக நசுங்கி சேதமடைந்துள்ளது. இதனை சரிசெய்வதற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: உலக தேங்காய் தினம்: தேங்காயை இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமா?