ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான கே.எஸ்.தென்னரசுவை அறிமுகப்படுத்தும் வேட்பாளர் அறிமுக கூட்டம், ஈரோடு அடுத்துள்ள வேப்பம்பாளையத்தில் நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலை இந்தியாவே எதிர்பார்க்கிறது.
அனைத்து அரசியல் கட்சியின் பார்வையும் ஈரோடு தேர்தலை பார்த்துதான் உள்ளது. ஈரோடு தேர்தலின் வெற்றிதான் நாடாளுமன்ற தேர்தலின் வெற்றி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொல்லியது போன்று, 2014 பாராளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் வெற்றி பெற்று காட்டினார். எனவே இரவு பகல் பாரமால் உழைக்க வேண்டும்.
சீப்பை ஒழித்தால் திருமணம் நடைபெறாது? சிந்தாமல் சிதறாமல் வாக்குகளை சேகரித்து வாங்க வேண்டும். ஒரு வாக்கையும் விட்டுவிடக்கூடாது. வாக்கு எண்ணிக்கையில் இரட்டை இலைதான் முன்னிலையில் இருக்க வேண்டும். 21 மாத ஆட்சியில் ஸ்டாலின் ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. அதிமுக ஆட்சியில்தான் புதிய மாவட்டமாக ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரித்து அறிவிக்கப்பட்டது.
விசைத்தறி குடும்பத்தின் பெண்கள் கண் கலங்கி உள்ளனர். திறைமையற்ற முதலமைச்சர், பொம்மை முதலமைச்சர் நாட்டை ஆட்சி செய்து வருகிறார். கரப்சன், கலெக்சன், கமிஷன் வாங்குவதில்தான் முதலமைச்சர் முதலிடம். அமைச்சர்களில், அதிகளவில் யார் கமிஷன் தருவார்கள் என்று பார்த்து வருகிறார்.
கூட்டத்தில் பங்கு பெறமால் இருக்க மக்களை மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை ஆகியவை திமுக மாவட்டச் செயலாளர் போன்று செயல்பட்டு வருகின்றனர். கட்சியும், ஆட்சியும் மாறும். அதன் எதிர்வினையை சந்திப்பீர்கள். சீப்பை ஒழித்தால் திருமணம் நடைபெறாது போன்று, அதிமுகவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது.
500 கோடி ரூபாய் ஊழல்: ஏராளமான திட்டங்களை வாரி வாரி வழங்கியவர், அதிமுகவினர்தான். தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமானால், பொருளாதாரத்தில் நாம் முன்னேற வேண்டும். ஈரோடு மாவட்டத்தின் ஜவுளி உள்ளிட்ட தொழில்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை கொடுத்துள்ளோம். ஏரிகள் தூர் வாரப்பட்டது. தடுப்பனைகள் கட்டப்பட்டுள்ளது.
ஜவுளி தொழில் செய்யவும், அதன் வளர்ச்சிக்காகவும் அதிமுக பல ஆண்டுகளாக பாடுபட்டது. விசைத்தறி உரிமையாளர்களுக்கு வளர்ச்சியைக் கொடுப்பதற்கு வருடந்தோறும் இலவச வேட்டி, சேலையை வழங்கி வந்தோம். ஆனால் திமுக ஆட்சியில் அதை நிறுத்தியதால், பல ஆயிரம் நெசவாளர்கள் வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர்.
விலையில்லா வேட்டி - சேலையை அவர்களுக்கு கொடுத்து இருந்தால், இந்த தொழில் முடங்கி இருக்காது. அற்புதமான பொங்கல் பரிசைக் கொடுத்துள்ளனர், திமுகவினர். கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசை நாம் மறக்க முடியுமா? அனைத்திலும் ஊழல் செய்துள்ளனர். 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர்.
அடிமாட்டு விலைக்கு திரைப்படங்கள்: பொங்கல் தொகுப்பில் செய்த ஊழலில் தான், வீதி விதியாக ஆட்டிக் கொண்டு திரிகின்றனர். பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இரட்டை இலைக்கு வாக்கு அளித்திருங்கள். அப்பாவுக்கு (கருணாநிதி) நினைவு மண்டபம் கட்ட வேண்டும். ஈரோட்டைச் சுற்றி அமைப்பட்ட பல முக்கிய சாலைகளை ரத்து செய்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 70 கோடி ரூபாய், தடையில்லா மின்சாரம் கொடுக்க 80 கோடி ரூபாய், 42 கோடி ரூபாயில் பேருந்து நிலையம், இதுபோன்ற பல சாதனை திட்டங்களைக் கொடுத்துள்ளோம். முதலமைச்சருக்கு நாட்டு மக்களைப் பற்றி கவலை இல்லை. மகன் நடித்த படத்தின் வெற்றியும், வசூல் பற்றியும்தான் கவலை.
உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்து அமைச்சராக்கி உள்ளனர். ஈரோடு தேர்தலின் வெற்றி, குடும்ப ஆட்சிக்கு முடிவு வைக்க வேண்டும். ரெட் ஜெயன்ட் நிறுவனம், எல்லா படங்களையும் அடி மாட்டு விலைக்கு வாங்கி வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலம் கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார்கள். 150 படங்கள் முடங்கியுள்ளது.
திமுக ஆட்சியில் மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. கடுமையான மின் கட்டண உயர்வு. சொத்து வரி அதிகரிக்கப்படாது என சொன்னார்கள். ஆனால், உயர்த்திவிட்டார்கள். குடிநீர் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். சாதாரண குடும்பத்தினர் 5,000 ரூபாய் இருந்தால் குடும்பத்தை நடத்தலாம்.
ஆனால் விலைவாசி உயர்ந்துள்ளது. ஏழை மக்களை வாழ வைத்தவர்கள், அதிமுகவினர். அம்மா உணவகம் மூலம் 3 வேளையும் சுடச் சுட உணவு கொடுத்துள்ளோம். 2 வருடத்தில் 1,62,000 கோடி கடன் வாங்கியுள்ளது, திமுக அரசு. 20 அமைச்சர்களை இறக்கி உள்ளனர். தினமும் கிடா விருந்து நடைபெறுகிறது.
நீட் ரகசியம் எப்போது வெளியே வரும்? வீடுவீடாகச் சென்று 1,000 ரூபாய் பணம் கொடுக்கிறார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய பணம். அதுவும் கொள்ளையடித்த பணம். எல்லாத் துறையும் சீரழிந்து கிடக்கிறது. அதிமுக பெற்ற குழந்தைக்கு, திமுக பெயர் வைத்து வருகிறது. பேனாவை வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. மறைந்தவர்களைப் பற்றி பேசக் கூடாது.
ஆனால் அனைத்து பக்கமும் எதிர்ப்பு வருகிறது. அதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடலில் வைத்தால்தான் பேனாவா?? நினைவு மண்டபம் முன் வைக்க வேண்டியதுதானே. 2 கோடியில் வைக்க வேண்டியதுதானே. 80 கோடியில்தான் வைக்க வேண்டுமா? 78 கோடி ரூபாயை மக்களுக்கு செலவு செய்ய வேண்டியதுதானே. 21 மாதத்துக்கு 21,000 கொடுக்க வேண்டும்.
திமுக வந்தால் கேட்டு வாங்குங்கள். உரிமைத்தொகை எங்கே என்று கேளுங்கள். சிலிண்டருக்கு மானியம் 100 ரூபாய் கொடுத்தார்களா? 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை கொடுப்பதாக அரசாணை கொண்டு வந்தோம். அதை திமுக ஆட்சிக்கு வந்து நிறுத்திவிட்டது. அம்மா இரு சக்கர வாகன மானியம் கொடுத்தோம். தாலிக்கு தங்கம் கொடுத்தோம்.
அதையும் நிறுத்து விட்டார்கள். மடிக்கணினியை 53 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கொடுத்துள்ளோம். அதையும் நிறுத்தி விட்டார்கள். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆனது. ஏன் நீட் தேர்வு ரத்து செய்யவில்லை? நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் இருப்பதாக உதயநிதி சொன்னாரே?
கவர்ச்சிகரமான பொய் சொல்லி வெற்றி பெற்றுள்ளனர். 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாகும் திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது. எந்த விதமான கோரிக்கையும் இல்லாமல் அதனை செய்துள்ளோம். இந்த தேர்தல் வெற்றி, எச்சரிக்கை மணியாக திமுகவிற்கு இருக்க வெண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார்.
இதையும் படிங்க: "சிறுபான்மையினருக்கு எதிரி அதிமுக" - அமைச்சர் நாசர்!