ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கூகலூர் பேரூராட்சி 1ஆவது வார்டில் மனுவக்காடு என்ற இடத்தில், 250 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் கூலித் தொழிலாளர்கள் என்பதால் காலை வேலைக்குச் சென்றால் மாலையில்தான் வீடு திரும்புவர். இங்கு நான்கு போர்வெல் பைப்புகளில் இரண்டு பழுதாகி உள்ளன.
இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு இரண்டு போர்வெல் பைப்புகள் போதுமானதாக இல்லை. ஆற்று குடிநீர் திட்டம் செயல்படுத்தி, சீரான குடிநீர் வழங்கக்கோரி பலமுறை கோரிக்கை மனு அளித்தும் பயனில்லாத காரணத்தால், இன்று 100க்கும் மேற்பட்ட மக்கள் கூகலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பேரூராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டில் இருக்கும் ஆண்கள் தண்ணீர் எடுப்பதற்காக தினமும் 5 கி.மீ தூரம் வரை செல்லவேண்டி உள்ளதாகவும், ஊரடங்கு முடிந்து ஆண்கள் பணிக்குத் திரும்பும்போது, வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் தண்ணீர் பற்றாக்குறையால் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும் என வேதனை தெரிவித்தனர்.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் தப்போது தண்ணீர் அதிகளவு உள்ளபோதே தங்கள் பகுதிக்கு குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும், தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் கிடைக்கும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த காவல் துறையினர், சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக அளித்த வாக்குறுதியை ஏற்று, இரண்டு மணிநேரத்துக்குப் பின் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க:புதைந்து கிடந்த கிராமத்தை திரும்பி பார்க்க வைத்த ஈடிவி பாரத்!