ஈரோடு: கரோனா தொற்றால் நோயாளிகள் உயிரிழக்கும்போது, மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, ஈரோட்டில் மருத்துவர்கள் கறுப்புப் பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் மாநிலத் துணைத் தலைவர் பேட்டி:
“தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை அதிகளவில் பரவிவருகிறது. இதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. மருத்துவத் துறை பணியாளர்கள், மருத்துவர்கள், பிற முன் களப்பணியாளர்கள் கரோனாவிற்கு எதிராக பல்வேறு பணிகளை செய்துவருகிறார்கள்.
அவர்களின் தியாகத்தை புரிந்துக்கொள்ளாமல் அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் தாக்கப்படுகிறார்கள். சமீபத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், கரோனாவிற்கு எதிராகப் பணியாற்றும் துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதை நாங்கள் வரவேற்கிறோம். மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நிலையான, உறுதியான பாதுகாப்பு வேண்டும். மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் எட்டு லட்சம் மருத்துவர்களும், தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் மருத்துவர்களும், ஈரோடு மாவட்டத்தில் 2,500 மருத்துவர்களும் கறுப்புப் பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: யூ-ட்யூபில் கலக்கும் சேலை கட்டிய சாகச பெண் மோனலிசா