கோயம்புத்தூர் மண்டல திமுக தேர்தல் பொறுப்பாளர் தயாநிதி மாறன், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திமுக கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "மதச்சார்பற்ற கூட்டணியில் ஸ்டாலினை முதலமைச்சராகப் பார்க்க அனைத்துத் தலைவர்களும் ஆவலாக உள்ளனர். ஸ்டாலின் அடுத்த முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் தீர்மானித்துவிட்டனர். முதலமைச்சரின் செயல்பாடுகளைப் பார்த்து மக்கள் வெறுப்படைந்துவிட்டனர்.
அதிமுக அமைச்சர்கள் தமிழ்நாட்டை கூறுபோட்டு கொள்ளையடித்துள்ளனர். கரோனா காலத்தில் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் தகடு அடிப்பதில்கூட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஊழல் செய்துள்ளார். மக்களிடம் திருடிய பணத்தில் அரசு விழாவில் வெள்ளித்தட்டு கொடுக்கின்றனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, எடப்பாடி பழனிசாமி என எல்லோரும் ஊழல் செய்துள்ளனர்.
நீட் தேர்வில் மாணவர்கள், பெற்றோர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது நர்சிங் கல்லூரிக்கும் நீட் தேர்வு வரவுள்ளது என்பது வேதனை அளிக்கிறது. புதுச்சேரியில் ஆட்சியைக் கவிழ்த்ததுபோல தமிழ்நாட்டில் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும். மு.க. ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற முறையில் நிர்வாகிகள் பணியாற்றிவருகின்றனர்" என்று தெரிவித்தார்.