சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுவது குறித்து சின்னமலை பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடாநிலையில் மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
2003ஆம் முதல் தீரன் சின்னமலையின் நினைவுநாளான ஆடி 18ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், நினைவு நாளுக்கு மாறாக அவரின் பிறந்ததினமான ஏப்ரல் 17ஆம் தேதி அரசு விழா எடுக்க கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசாணை வெளியிடப்பட்டு ஏப்ரல் 17ஆம் தேதி தீரன் சின்னமலை பிறந்த தினம் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் ஓடாநிலையில் தீரன் சின்னமலைக்கு முழு வெண்கலச்சிலை வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நினைவுநாளில் தீரன் சின்னமலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவும், பிறந்தநாளில் கலை நிகழ்ச்சிகளுடன் விழா நடத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: கடலூர், நாகையில் பெட்ரோலியத் திட்டங்கள் ரத்து - தமிழ்நாடு அரசு