ஈரோடு: சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவுகளை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு, அவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. இந்த வகையில் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடா நிலையில் பிறந்த தீரன் சின்னமலையின் நினைவு நாளை போற்றும் வகையில், ஆடிப்பெருக்கென்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு, அரச்சலூர் ஓடா நிலையில் இருக்கும் தீரன் சின்னமலையின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர்களான செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தீரன் சின்னமலையின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
முன்னதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசி மோகன் ஆகியோரும் தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் ஆளுநர் நடத்தும் உயர்கல்வி மாநாடு!