ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், குன்றி, குத்தியாலத்தூர், கூத்தம்பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாரம்பரியமாக வசிக்கும் பழங்குடியின மக்களை ஒருங்கிணைந்து மக்களின் நிலையான வளர்ச்சி குறித்து சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் கடம்பூரில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா முன்னிலையில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பழங்குடியினர் கலந்துகொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.
இதில் மாக்கம்பாளையம் கிராமத்தில் 200 ஆண்டுகளாக வசிக்கும் பழங்குடியின மக்கள், இறந்தவர்களின் உடல்களை புறம்போக்கு இடத்தில் புதைப்பதாகவும், தற்போது வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக மக்கள் புகார் அளித்தனர். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற கோட்டாட்சியர் பிரியதர்ஷினியிடம் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, சடலத்தை புதைக்க இடம் தர மறுப்பது அடிப்படை உரிமை மீறல், அங்கு மக்கள் பாரம்பரிய பயன்படுத்தி வந்த 2 ஏக்கர் நிலத்தை மயானத்துக்கு வருவாய்த்துறை ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு கிராமத்திலும் சடலத்தை புதைக்க இடம் ஒதுக்குமாறும், அடிப்படை உரிமையை மறுக்கக்கூடாது என்றார். இதையடுத்து வருவாய்த்துறையினர் எந்ததெந்த கிராமத்தில் மயானம் இல்லை என்பது குறித்து ஆய்வு செய்து, அவர்களுக்கு தேவையான இடம் ஒதுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மலையாளி மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்க தமிழக அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகவும் , விரைவில் மத்திய அரசு, மலையாளி மக்களுக்கு எஸ்டி அந்தஸ்து வழங்கும் என பழங்குடியின இயக்குநர் அண்ணாதுரை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வனத்துறை, மருத்துவத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தலைவர் சின்னராஜ் கூறுகையில், நாங்கள் பொருளாதார அடிப்படையிலும், கல்வி அடிப்படையிலும் பின்தங்கி இருக்கிறோம். இதனைக் கருத்தில் கொண்டு எங்களுக்கு சாதி சான்று வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தோம். இதனை ஏற்று நடவடிக்கை எடுத்துள்ள நீலகிரி பாரளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிற்கும் ,இதற்கு உறுதுணையாக ஈரோடு இருந்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மலையாளி இன மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்த தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க : "அண்ணாவை பின்பற்றுகிறார் மோடி... உதயநிதியின் தலைக்கான விலை சரிதான்" - ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்!