ஈரோடு கருங்கல்பாளையம் அருகே காந்திபுரத்தில் 50க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று (ஜூன் 13) நள்ளிரவு அப்பகுதியிலுள்ள ஒரு குடிசை வீட்டிலிருந்து கடும் சப்தம் ஏற்பட்டதுடன் அந்தக் குடிசையிலிருந்து கரும்புகை வெளியேறியது.
இதைக் கண்ட அருகாமை குடிசை வீட்டுப்பகுதியினர், வீடுகளை விட்டு குழந்தைகள், பெரியவர்களுடன் அலறியடித்துக் கொண்டு வெளியேறியதுடன், கைகளுக்குக் கிடைத்த விலையுயர்ந்த பொருள்களையும் எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியேறினர்.
இதனிடையே அந்த வீட்டில் கொளுந்து விட்டு தீ பற்றியெரியத் தொடங்கியது. பலத்த காற்று வீசத்தொடங்கியதால் தீ மளமளவென பரவத் தொடங்கியது. இதனிடையே, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை அணைத்து ஏனைய பகுதிகளுக்கும் தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் அப்பகுதியிலுள்ள 4 குடிசைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததில் வீடுகளிலிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அடுப்புகள், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள், ரொக்கப்பணம், பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள், குழந்தைகளின் பாட புத்தகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து கருகின.
இந்தத் தீவிபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லோகநாதன் என்பவர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஈரோடு அரசினர் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தீ விபத்தில் அப்பகுதியிலுள்ள 10க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் குறைந்தளவில் சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கருங்கல்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளதால் உரிய இழப்பீடுகளை வழங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இளைஞரால் கொலை செய்யப்பட்ட காளை - மருத்துவக் குழு உடற்கூறாய்வு